ரஞ்சனின் ஒலிப்பதிவுகள் இலங்கையில் சட்டம் அழுகி துர்நாற்றம் எடுப்பதை காட்டுகிறது..!

0

அறிந்தோ அறியாமலோ ரஞ்சன் ராமநாயக்க வரலாற்று சிறப்புமிக்க பணி ஒன்றை செய்துள்ளதாக விமர்சகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விக்டர் ஐவன் இலங்கையின் பொலிஸ், முப்படைகள், பொது நிர்வாகம், நீதித்துறை என்பவற்றில் காணப்படும் ஊழல்கள் அதிகார துஷ்பிரயோகம் என்பவை தொடர்பாக நீண்ட நாட்களாக எழுதி வரும் ஒர் விமர்சகர் என்பதுடன் நீதித்துறை சீர்கேடுகள் தொடர்பில் புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

நான் இந்த விசர்த்தனமாக வேலைகளை மிகவும் உணர்வு பூர்வமாகவும் அக்கறையுடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் சுட்டிக் காட்டிய நாட்டில் காணப்படும் அழுகிய நிலைமை மற்றும் அதன் துர்நாற்றம் என்பவற்றை ரஞ்சன் பதிவு செய்துள்ள தொலைபேசி உரையாடல்களை மூலம் இலங்கை மக்கள் புரிந்து கொண்டால், ரஞ்சன் அறிந்தோ அறியாமலோ வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்துள்ளார்.

இலங்கையில் முழு நிறுவன முறையும் அழுகி போயுள்ள நிலைமையை புரிந்து கொள்ள முடியும். இந்தளவுக்கு அழுகி போகும் முன்னர் இலங்கையில் படித்தவர்கள் ஏன் அறிந்து கொள்ளவில்லை என்பதே எனது கேள்வி என விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச,

தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக நீதித்துறை மீறி நம்பிக்கை இல்லாமல் போய் நாடு அராஜக நிலைமைக்கு சென்றுள்ளது. நீதிமன்றம் வழங்கும் அனைத்து தீர்ப்புகள் குறித்து மக்கள் சந்தேகிப்பார்கள் என கூறியுள்ளார்.

இந்த நிலைமையில் நீதிமன்ற தீர்ப்புகளை எப்படி ஏற்றுக் கொள்வது என மக்கள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பாரதூரமானது. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்குள்ளது.

கடந்த காலத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களுடன் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் துறையில் சிலருக்கு தொடர்புள்ளது.

இந்த நிலைமை தடுத்து நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது சம்பந்தமாக பிரதம நீதியரசருக்கு தெளிவான பொறுப்புள்ளது. இந்த செயற்பாடுகள் சம்பந்தமாக நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.