இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்றாகும்..!

0

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.

முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் (பெனும்ப்ரா) மட்டுமே சந்திரனில் விழுவதால், இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை இலங்கையின் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாட்டினரும் கிரகணத்தை பார்க்கலாம் என வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் முழு சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.