ஜனாதிபதி கோட்டாவின் போலி ஆலோசகர் ஒருவர் கைது..!

0

ஜனாதிபதியின் ஆலோசகராக போலியாக முன்னின்று மொறட்டுவ பிரபல வித்தியாலயத்தின் அதிபர் ஒருவரை அச்சுறுத்திய நபர் ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நண்பகல் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர் என்று ஏமாற்றி அச்சுறுத்தியமை, மற்றும் தாக்கியமை போன்ற குற்றச் சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிரியானந்த திஸ்ஸ டி அல்விஸ் என்ற குறித்த நபர், இல 11/9 சென் செபஸ்டியன் மாவத்த மொறட்டுவ என்ற முகவரியைச் சேர்ந்தவர் .

இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இந்த நபர் மொறட்டுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களையோ, அரச அதிகாரிகளையோ அச்சுறுத்தும் நபர்களை தகுதி தராதரம் பார்க்காது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டை அதிகாரிகளே ஆள வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்ற கருத்தையும் அண்மையில் ஆணித்தரமாக முன் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் அன்றாட கடமைகளுக்கோ, அரச பணிகளுக்கோ இடையூறு செய்யும் நபர்களுக்கு எதிராகவும் இடையூறு செய்யும் ஆளுங் கட்சி அரசியல்வாதிகள், அவர்களின் அடிவருடிகள் என்பவர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.