விபத்தை ஏற்படுத்திய பொலிசார் பொதுமகனை அச்சுறுத்தியதால் பதற்றம்..!

0

வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக பொலிஸாரின் தவறான செயற்பாட்டினை அடுத்து பொது மக்கள் முற்றுகையிட்டமையால் அங்கு சற்று நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

இச் சம்பவம் நேற்று (26) மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கில் பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கைக்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பொலிஸார் இளைஞனை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, பொது மக்கள் அவ்விடத்தினை முற்றுகையிட்டனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் அவசர பொலிஸ் சேவைக்கு தெரியப்படுத்தியமையை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களையும், சாரதிகளையும் பொலிஸார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து பொது மக்கள் வீதியினை விட்டு விலகி சென்றமையினால் பதற்ற நிலைமை வழமைக்கு திரும்பியது.