மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு – தயாராகும் ஐதேக; சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..!

0

தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டிருந்தால் ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் விசனமடைந்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட், ரவுப் ஹகீம் போன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக கதைகள் உலாவுகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அரசியல் பழி வாங்கல்களை செய்து கொண்டிருப்பதாகவும், அரசாங்கம் உடனடியாக அரசியல் பழிவாங்கல்களை நிறுத்த வேண்டும்.

இல்லையெனில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து பிரதமர் பதவியை கைப்பற்றுவதுடன் புதிய அமைச்சரவையையும் கொண்டு வருவோம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், தாங்கள் அரசியல் பழிவாங்கல்களை செய்யவில்லை என தெரிவித்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நீதித்துறை தனது செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது என்றும், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், அரசியல் பழிவாங்கல்களை செய்வது இந்த அரசாங்கத்தின் வேலை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.