கோட்டாவுக்கே சவால் விடும் ஆவா குழு; யாழில் அட்டகாசம் தொடர்கிறது..!

0

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மானிப்பாய் கட்டுடை அரசடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர். அத்துடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கியுள்ளனர்.

குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களும் இணைந்து அந்தக் கட்டிடத்தை இடித்தழித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பலே இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் யாழ். மாவட்ட பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரான இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி, கேற் என்பவற்றையும் சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழில் ஆறு வாள் வெட்டுக் குழுக்கள் இயங்குவதாகவும் அவர்களை புது வருடத்திற்கு முன்னர் அடக்குவோம் எனவும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்த நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஜனாதிபதி கோட்டா முடிந்தால் செய்து காட்டட்டும், நாம் இதைதத்தான் செய்வோம் என்ற தொனியில் செயற்படுகின்றமை வெளிப்படையாகவே தெரிகின்றது.