சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக தேசிய பாதுகாப்பு தினம் நாளை..!

0

தேசிய பாதுகாப்பு தினம் நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் சகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவூட்டும் வகையில், 2005ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக, டிசெம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அன்றைய தினம் மத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2004ம் ஆண்டு சுனாமியின் பின்னர் இலங்கை அரசால் மேற் கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும், ”நியாப்” வீட்டுத் திட்டத்தில் பல கோடி ஊழல் நிகழ்ந்துள்ளதாகவும் பல்வேறு மட்டங்கள் குற்றஞ் சுமத்தி வருகின்றனர்.

அத்துடன் மீள்குடியேற்ற அமைச்சராக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பதவி வகித்தார். 

மேலும் சுனாமி ஏற்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் இன்னும் அதன் கோரத் தாண்டவம் நினைவினை விட்டு நீங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.