போராட்டம் மௌனித்த பின்னர் எம்மை மீள போருக்கு அழைக்க வேண்டாம்..!

0

எமது விடுதலைப் போர் மௌனித்த பின்னர், தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம். நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மை அழைக்க வேண்டாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் மேர்வின் சில்வா தமிழர்களை வாள் கொண்டு துரத்துவோம் என கூறியதாகவும், அவரின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்று (24) நடைபெற்ற எம்.ஜி.ஆர் நினைவு தினத்தின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் 1983 ஆம் ஆண்டு தமிழ் இனப் படுகொலை நடைபெற்று, லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்குச் சென்ற போது, மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் அனுமதியைப் பெற்று பல உதவிகளைச் செய்தவர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் பாரிய உதவிகளைச் செய்தவர்.

ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள், தலைவர்கள் தங்கதுரை குட்டிமணி ஆகியோருக்கு இந்திய மத்திய அரசின் ஒப்புதலோடு, அமரர் இந்திரா காந்தியின் உதவியோடும், இல்லங்களை வழங்கியவர். 1987 ஆம் ஆண்டு இறக்கும் வரை, ஈழத் தமிழ் மக்களுக்காகவும், இந்திய தமிழ் மக்களுக்காகவும், உலகத் தமிழ் மக்களுக்காகவும், தமது சேவைகளை முன்னெடுத்தவர்.

ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பு அமரர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் இருந்ததைப் போன்று இல்லாது குறைவாக காணப்படுகின்றது. அதேபோன்று, தமிழக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்க வேண்டும்.

அண்மையில், மேர்வின் சில்வா அவர்கள் வாள் எடுத்து எம்மை விரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். அவருக்கு நாங்கள் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலைப் போராட்டத்தை மௌனித்ததென்று அறிவித்ததன் பின்னர், தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் போருக்கு அழைக்க வேண்டாம். நீங்கள் வாள் எடுத்தால், நாங்களும் எல்லாளன், சங்கிலிய மன்னனின் கேடயங்களை எடுக்க வேண்டி வரும்.

அதையும் மீறி நீங்கள் தாக்குதலை தொடருவீர்களாக இருந்தால், நாங்களும், பண்டார வன்னியன், சங்கிலிய மன்னன், எல்லாள மன்னனுடைய வாள்களை எடுக்கத் தயங்க மாட்டோம். அந்த நிலமைக்கு தயவு செய்து எங்களைத் தள்ளாதீர்கள்.

இனிமேலும் இந்த நாட்டில் இரத்தக்களரி வேண்டாம். இணைப்பாட்சி சமஸ்டியைப் பெற்று, எமது மக்கள் நின்மதியாக வாழ வைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் அவ்வாறு வாழ, ஈழத் தமிழர்களதும், புலம்பெயர் தமிழர்களதும் ஆதரவும் எமக்கு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.