காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

0

 

குருர் ப்ரம்மா….
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கின்ற விசேட அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருக்கும் மாணவ மாணவிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே.!

இன்றைய தினம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் வசந்தாதேவி அவர்களின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்ற இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இன்று வழங்கி வைக்கப்படுகின்ற இந்த கற்றல் உபகரணங்களுடன் இவர்களின் தேவைகள் நிறைவு பெற்று விட்டது என யாரும் கருதிவிடக் கூடாது. மலைபோன்ற தேவைகளை உடையவர்கள் எம் மக்களுட் பலர். வீடு, வாசல், சொத்து, சுகம், இருப்பிடங்கள் மற்றும் உறவுகள் என அனைத்தையும் இழந்திருப்பவர்கள் பலர். அவர்களுட் சிலரின் குழந்தைகளை கையேற்றிவிடுவதே எமது இந்த கைங்கரியத்தின் இலக்கு.

பிறந்த நாளை இவ்வாறு கொண்டாட வேண்டும் என்று நினைத்த வசந்தாதேவி அம்மையாருக்கு எமது மனங் கனிந்த நன்றிகள் உரித்தாகுக.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தத்தில் இறந்து போனவர்கள் போக அவர்களுடன் இருந்து உயிர் தப்பித்த பலதரப்பட்ட மக்கள் பலவித பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரதும் தற்போதைய நிலை எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற வகுதியினரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

காணாமல்ப் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டார்களா அல்லது மறைவான ஏதாவது முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்களா என்ற எதுவித தகவல்களும் இல்லாத நிலையில் பெற்றௌர்களும் அவர்தம் உற்றார் உறவினர்களும் குழந்தைகளும் மிகவும் அல்லல்பட்டுக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

காணாமல் போனதாகக் கூறப்பட்டால் பொலிசார் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் கடைசியில் எங்கு காணப்பட்டனர் என்று அறிந்து அங்கிருந்து விசாரணைகளைத் தொடங்க வேண்டும். ஆனால் எமது பொலிசாரும் அரசாங்கமும் இராணுவமும் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை என்றவாறே இருந்து வருகின்றார்கள். அதாவது விசாரணை செய்வதைத் தவிர்க்கின்றார்கள்.

இதனால்தான் இன்றைக்கு ஆயிரம் நாட்களைக் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை சமாதானம் செய்வதற்கே இது போன்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்கள் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த அலுவலகங்களின் செயற்பாடுகள் முன்னுக்கு பின் முரணானவை. இவர்கள் உண்மையாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடுகின்றார்களா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சமாதானப் படுத்துவதற்கான வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் இரண்டு வகையானவர்கள் காணப்படுகின்றார்கள். ஒன்று யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டு அவர்களின் இருப்பிடம் தெரியாத நிலையில் இருக்கும் ஒரு தொகுதியினர். இன்னொரு தொகுதியினர் யுத்தத்தின் இறுதி நாட்களில் அவர்களின் பெற்றௌர்களினால் அல்லது கணவன் மனைவியினரால் அல்லது பிள்ளைகளினால் தாமாகவே வலிந்து அரச படைகளிடம் தமது அன்புக்குரியவர்களை கையளித்த உறவுகள்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசு நிச்சயம் கூறித்தான் ஆகவேண்டும். இதற்கு எந்தவித சாட்டுப் போக்குகளையும் கூற முடியாது.

இவர்களைப் பொறுப்பேற்ற இராணுவத்தினரே இதற்கான பொறுப்புக்களைக் கூற வேண்டும். தற்செயலாக அவர்களின் கைகளில் இருந்து சட்ட விரோத தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்தால் அவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எப்படியிருப்பினும் இச் சங்கிலித் தொடரில் ஏதோ ஒரு புள்ளியில் உள்ளவர்கள் வகை கூறியே ஆக வேண்டும்.

எமது அரசியல் தலைவர்கள் எழுந்தமானமாகக் கூறுகின்றார்கள் நடந்து முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடக்க இருக்கின்ற விடயங்கள் நல்லவையாக நடக்க நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்று. தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவதற்கு ஒருபோதும் பின்நிற்கவில்லை.

ஆனால் பெரும்பான்மையினரே எம்மை இணைத்துக் கொள்வதற்கோ அல்லது எமக்குரிய அங்கீகாரங்களை வழங்குவதற்கோ முன் வருகின்றார்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் “சேர்ந்து போங்கள்” அல்லது “சிங்களவர்களுக்கு அது பிடிக்காது அவர்களுக்குப் பிடிக்காதவற்றைத் தவிருங்கள்” என்று கூறும் எம்மோர் ஏதோ மத்தியில் இருப்பர்களிடம் ஏதோ எதிர்பார்ப்பிலேயே அவ்வாறு கூறுகின்றார்கள் போல்த் தெரிகின்றது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது எமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு நாம் இடமளித்தல் ஆகாது.

எம்மைப் பொறுத்தவரையில் தேவையுடையவர்களுக்கே அவர்களின் தேவை பற்றிய தெளிவும் அவசரமும் நன்கு விளங்கும். ஏனையவர்களுக்கு இது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. எமது அரச தலைவர்கள் கூறுவது போல சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் இல்லை என்ற கூற்று மிகத் தவறானது. படித்த பல சிங்கள சிவில் தலைவர்கள் சமஸ்டியை விரும்புகின்றார்கள். சமஸ்டி பற்றிய தேவை தமிழ் மக்களுக்கே உரியது.

எமது நிலங்கள், இருப்பு. வளங்கள், கலைகள் பறிபோகாதிருக்க சமஸ்டி தேவையாக இருக்கின்றது. அரசியல் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களே ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை மிகுந்த அபிலாசையுடன் எதிர் நோக்குகின்றார்கள்.

நாட்டைத் துண்டு போடுவதோ அல்லது பிளவுபடச் செய்வதோ எமது நோக்கமல்ல. மாறாக தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்ற கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

பன்னெடும் காலமாக நாங்கள் இந்தக் கோரிக்கையை கூட்டாகவும் தனித்தனியாகவும் விடுக்கின்ற போதும் சில அரசியல் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளும் எதிர்காலத்தில் அவர்களின் அரசியல் இருப்புக்களை வலுப்படுத்தக் கூடிய நோக்கங்களுமே சிங்கள மக்களைப் பிழையான வழியில் இட்டுச் செல்ல வைக்கின்றது.

ஒரு காலத்தில் அரசியல் தலைவர்களின் சிந்தனைகள் நேரானவையாகவும் நிர்மலமானவையாகவும் நிதானமானவையாகவும் காணப்பட்டன. ஆனால் இன்று ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பதும் தமக்கு வேண்டாதவர்களின் அரசியல் பாதைகளில் குழிபறிப்பதுமாக காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட இழுபறி நிலைகளே உருவாகியுள்ளன.

உணவுப் பஞ்சம், குழந்தைகளுக்கான பால்மா இன்மை போன்ற காரணங்களுக்காக தனது இயலாமை காரணமாகத் திருடிய ஒருவனுக்கு வருடக் கணக்காக சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது.

ஆனால் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டு விட்டு வெள்ளை வேட்டி சேட்டுடன் வலம் வருகின்ற அரசியல் தலைவர்கள் மாலை மரியாதைகளுடன் கௌரவிக்கப் படுகின்றார்கள். மக்களும் தெரிந்து கொண்டே அவர்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

இந்த நிலையிலேயே நாம் ஒரு இறுதி தீர்மானத்திற்கு வர வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது அரசியல் தலைமைகள் எமக்கு ஏற்புடையதான ஒரு அரசியல் களத்தை ஏற்படுத்தித் தர முடியாத பட்சத்தில் தமிழ் மக்கள் தமது பகுதிகளில் கூட்டாக இணைந்து கொண்டு தம்மைத்தாமே ஆளுகின்ற ஒரு இனமாகப் பொருளாதார நிலையில் முன்னேறுகின்ற போதுதான் அரசு எம்மை வியப்புடன் திரும்பிப் பார்க்க வழிசெய்யும்.

அதுவரை எமது போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இதுபோன்ற குழந்தைகளின் பாடசாலைத் தேவைகளும் மற்றும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சென்றவாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு எமது நம்பிக்கைப் பொறுப்பு உதவியது. இன்று இந்த சிறிய கைங்காரியத்தில் ஈடுபட்டுள்ளோம். இவற்றை நாம் செய்யவில்லை. நாம் வெறும் கருவிகளே. எம்மீதும் எமது மக்கள் மீதும் கரிசனை கொண்ட எமது தமிழ் உறவுகளே இவ்வாறான உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மேலும் எமது உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் எம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும் எனத் தெரிவித்து இன்றைய இந்த நிகழ்வில் உதவிகளை வழங்கிய அருளானந்தம் வசந்தாதேவி அவர்கள் பல காலம் சீரும் சிறப்புமாக வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.

நன்றி.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி