கத்தோலிக்க அருட்தந்தையை தாக்கிய முஸ்லீம் பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை..!

0

மன்னார் தோட்டவெளி பகுதியில் இடம் பெற்ற சம்பவத்தில் அருட்தந்தை அலெக்சாண்டரைத் தாக்கி மக்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி உயிலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் வவுனியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளுர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென்பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப் பத்திரங்களை மீன் வளப்புக்கென வைத்துக் கொண்டு, மண் அகழ்வில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை மண் அகழ்வு இடம் பெற்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் போது பங்குத் தந்தை குறித்த பகுதிக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மக்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும், பங்குத் தந்தையை தாக்கி தீய வார்த்தைகளினால் பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உடன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.