வவுனியா நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் முழு விபரம் இதோ..!

0

வவுனியா நகர சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் தலைமையில் 28.11.2019 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வவுனியா நகரசபைக்கு உட்பட்ட வட்டாரங்களில் வீதிகள் புனரமைப்பு, வடிகால் அமைப்பு, மின் விளக்கு பொருத்தல், மயானங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறுபட்ட சமூகநல வேலைத் திட்டங்களுக்கு வட்டார ரீதியாக பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டார ரீதியான விபரம் வருமாறு,

  • தாண்டிக்குளம் – 35 இலட்சம்
  • பட்டாணிச்சி புளியங்குளம் – 55 இலட்சம்
  • பண்டாரிகுளம் – 30 இலட்சம்
  • வைரவபுளியங்குளம் – 35 இலட்சம்
  • குடியிருப்பு – 40 இலட்சம்
  • கடைவீதி – 45 இலட்சம்
  • மூன்றுமுறிப்பு – 45 இலட்சம்
  • இறம்பைக்குளம் – 40 இலட்சம்
  • சின்னபுதுக்குளம் – 45 இலட்சம்
  • கோவில்குளம் – 35 இலட்சம் ரூபாவும் மொத்தமாக பத்து வட்டாரங்களுக்கும் நான்கு கோடியே ஐந்து இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நகரசபைக்கு உட்பட்ட வட்டார பராமரிப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக வீதி விளக்கு, வீதி திருத்தப் பொருட்கள் கொள்வனவு, விசேட டெங்கு கட்டுப்பாடு மற்றும் நகர சுத்தப்படுத்தலுக்கென மொத்தமாக 80 இலட்சம் ரூபாவும்,

நகரசபை கலாசார மண்டப, திறந்த சாப்பாட்டறை இணைப்பு, நகர மண்டபம் மற்றும் கலாசார மண்டபம் புனரமைப்பு, நகர சபை மைதான விளக்குகள் ஒளியூட்டல் விளையாட்டு மைதான திறந்த வெளி அரங்கு, மலசல கூடம் ஓய்வு அறை அமைத்தல், ஆதன மீள் மதிப்பீடு சொத்து முகாமைத்துவம், பூந்தோட்ட மயான எரியூட்டல் உபகரண தொகுதி புனரமைப்பு, வவுனியா குள சுற்றுலா மையம் மேம்படுத்தல், உடல் வலுவூட்டல் பயிற்சியாளர் நியமித்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு 1,64,50000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்மக் கழிவு முகாமைத்துவம் 6 இலட்சம் ரூபாவும், சமூக மற்றும் பொது விடயங்களான கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா வழங்கல், கலாசார மற்றும் ஏனைய நிகழ்வுகள் உள்ளுராட்சி வாரம் மற்றும் நடமாடும் சேவை, தேசிய வாசிப்பு மாத நிகழ்வு என்பனவற்றிற்கு 11,25,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சபை நிர்வாகம் மற்றும் இதர செலவுகள் உள்ளடங்கலாக மொத்தமாக 8,58,50000 ரூபா நகரசபையால் 2020ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சபை உறுப்பினர்களின் ஆதரவுடனும் சபையின் செயலளர், கணக்காளர் மற்றும் நிர்வாக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் வவுனியா நகர மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டும் வவுனியா நகரை சுத்தமானதும் முன் மாதிரியான நகராக மாற்றுவதை நோக்காகக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பொது மக்களினதும், சபை உறுப்பினர்களினதும் வேண்டுகோளிற்கு அமைவாக இவ் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா நகர சபையின் தவிசாளர் இராசலிங்கம் கௌதமன் தமிழ்பொறிக்கு தெரிவித்தார்.