தமிழ் மக்களை சிநேக பூர்வமாகவே நடத்துகிறோம்; யாழ் கட்டளைத் தளபதி ..!

0

நாம் தமிழ் மக்களை எப்போதும் சிநேகபூர்வமாகவும் இதய சுத்தியுடன் தான் பார்க்கிறோமே தவிர எமக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியில் இன்று இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 700 வீடுகள் யாழில் மக்களுக்கு இராணுவத்தினரால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இன்னும் 27 வீடுகளை நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதில் புங்குடுதீவு பகுதியில் 25 வீடுகளும் மற்றும் யாழ் நகரை அண்டிய பகுதிகளில் இரண்டு வீடுமாக மொத்தம் 27 வீடுகளுக்கான வேலைத் திட்டங்கள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், அண்மைய நாட்களில் மலசல கூடமற்ற குடும்பங்களுக்கு மலசல கூடங்களை அமைத்து கொடுத்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூக நலன்சார் வேலைத் திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

நாங்கள் எப்போதும் தமிழ் மக்களை சிநேகபூர்வமாகத்தான் பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் நெறிப்படுத்தலில் வடக்கில் சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களில் ஒன்றான வீடு கட்டிக் கொடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இன்றைய தினம் வரை சுமார் 700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணைத் தூதுவர் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.