இலங்கை பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்; தேரர் கோரிக்கை..!

0

புலம்பெயர்ந்த தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ள இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கூற்றை எதிர்த்து பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கை வெளியேற வேண்டும் எனவும் நாட்டை அவசரமாக வெளியேறுமாறு கலாநிதி ஓமல்பே சோபிதா தேரர் கோரியுள்ளார்.

நேற்று (17) எம்பிலிப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,

“எங்களுக்கு பிரச்சினையொன்று இருக்கிறது. போரிஸ் ஜோன்சன் இலங்கை பிரச்சினை குறித்து ஏன் இவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளார்.

அவர் இன்னும் இலங்கை ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ நாடு என்று நினைக்கிறாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தது தமிழ் மக்களுடன் அவர் வைத்துள்ள உறவு பற்றியது.

இலங்கை உடனடியாக பொதுநலவாய நாடுகளிலிருந்து விலக வேண்டும். பொதுநலவாயம் என்பது இங்கிலாந்தைத் தவிர வேறொன்றுமில்லை, அது பிரிந்து பிளவுபடாமல் இருப்பதையே அது விரும்புகின்றது.

பொதுநலவாயம் என்பது காலனித்துவத்தை நிலை நிறுத்துவதற்கான தோல்வியுற்ற ஒரு முயற்சி.ஜோன்சன் இலங்கை இங்கிலாந்தின் காலனித்துவ நாடு என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இலங்கை பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து விரைவாக விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை 1948 பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1796ம் ஆண்டிலிருந்து சுமார் 150 வருடங்கள் இங்கிலாந்தின் காலனித்துவ நாடாகக் காணப்பட்டது.

அத்துடன் இங்கிலாந்து சுதந்திரம் வழங்கிய போது பிரிந்திருந்த தமிழர் தாயகத்தை பிரித்து வழங்காது ஒன்றாக சேர்த்து வழங்கியமையாலேயே ஈழ தேசம் இன்று வரை அரசியல் இடர்பாட்டினை சந்தித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.