முன்னாள் இராணுவ தளபதிக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்..!

0

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பாக்கிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு பெயர் பர்வேஸ் முஷாரப். பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மாற்றி சர்வதேச அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இதன் காரணமாகவே தற்போது இவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1943 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் பிறந்த முக்ஷாரப், பின்னர் பாகிஸ்தானின் இஸ்தன்புல், மற்றும் கராச்சியில் தனது இளமைக் காலத்தினை கழித்தார்.

அதன் பின்னர் அவர் 1961 இல் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் 1964 இல் இடம்பெற்ற ஆப்கான் சிவில் போரிலும் , 1965 நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரிலும் முக்கிய பங்காற்றினார்.

அதனைதொடர்ந்து 1980-களில் பாகிஸ்தானின் பீரங்கிப்படை கமாண்டராக நியமிக்கப்பட்டு அதிலும் சிறந்து விளங்கினார். தொடர்ச்சியாக 1990-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாகப் பதவி உயர்வு, துணை ராணுவச் செயலர் மற்றும் ராணுவ இயக்குநர், ஜெனரல் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.

இந்நிலையில், 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, முஷாரப்புக்கு அனைத்து சிறப்பு உரிமைகளையும் வழங்கி அப்போது நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கார்கில் போருக்கு முஷாரப்பை தலைமை தாங்க அனுப்பி வைத்தார்.

அந்தப் போரின் தோல்விக்குப் பிறகு, நவாஸ் ஷெரீஃப்புக்கும் முஷாரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில் அதனை பயன்படுத்திக்கொண்ட முஷாரப், தன் கட்டுப்பாட்டிலிருந்த ராணுவத்தில் கிளர்ச்சி செய்து ஷெரீஃப்புக்கு எதிராகச் சதித்திட்டம் நடத்தி, 2001-ம் ஆண்டு அதிரடியாக பாகிஸ்தான் அரசியலில் நுழைந்தார்.

அப்போது அதிபராக இருந்த ஷெரீஃப்பை சிறையில் அடைத்து பகிரங்கமாகத் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்துக்கொண்டார் முக்ஷாரப். அந்தக் காலகட்டத்தின்போது சுமார் ஒரு மாதம் பாகிஸ்தான் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது.

முஷாரப் அதிபராகப் பதவியேற்ற பிறகும் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.அதன் பின்னர், பல வருடங்கள் பாகிஸ்தானை ஆட்சி செய்து வந்தார் முக்ஷாரப்.

பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் முஷாரப்பே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இது பாகிஸ்தான் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதன் காரணமாகவே 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தானின் அதிபராகவும் அந்நாட்டு ராணுவ ஜெனரலாகவும் அரசியலமைப்பை முடக்கி திடீரென அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சிறை பிடித்தல், பதவி நீக்கம் போன்ற பல்வேறு சம்பவங்கள் பாகிஸ்தானில் அரங்கேறியது.

எனினும் அவசர நிலையைக் கொண்டு வந்த அடுத்த 25-வது நாளில் தன் ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் முஷாரப்.

இந்நிலையில் அவரின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அப்போது கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர் அரசியல் அழுத்தங்களால் 2008-ம் ஆண்டின் முற்பகுதியில் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி சார்பில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

அதன் பின்னர், அவர் பாகிஸ்தான் அரசியலிலிருந்து முற்றிலும் காணாமல் போனார். இதற்கிடையில் 2013-ம் ஆண்டு அவரது கட்சியே அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்ததுடன் , ஊழல், பெனாசிர் பூட்டோ போன்ற சில பாகிஸ்தான் தலைவர்கள் கொலை ஆகியவற்றிலும் முஷாரப்புக்கு தொடர்புள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து தன் மீதான வழக்கிலிருந்து தப்பிக்க நீண்ட காலம் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் முக்ஷாரப். இறுதியில் 2014-ம் ஆண்டு முஷாரப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அதற்கான அனைத்து ஆவணங்களும் முறையாகத் தாக்கல் செய்யப்பட்டன.

அதன் பின்னர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தன் மீதான குற்றத்தை முற்றிலும் மறுத்து வந்தார்.

இறுதியாக இந்த வழக்கு இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு திடீரென முஷாரப்புக்கு உடல் நிலை சரியில்லாது போனதனால் வெளிநாடு செல்ல அனுமதி பெற்று துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது.

அவருக்கு அதே மாதம் 28-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்குவதாக இருந்த நிலையில் , தனது தரப்பிலான வாதங்களை பதிவு செய்ய கால அவகாசம் கேட்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது .

மேலும், முஷாரப் தன் தரப்பு வாதங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் வழங்கலாம் என அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கில் இன்று அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.