கோட்டாவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் மீள்பரிசீலிக்க வேண்டும்..!

0

அதிகார பரவலாக்கலை அடியோடு நிராகரித்த கோட்டாபயவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் தேவானந்தா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பரவலாக்கம் சாத்தியமில்லை என கோட்டபாய சென்னதன் பின்னர், அவரை ஆதரிக்கும் தமிழ் தரப்பினர் தமது முகத்தை எங்கே கொண்டு சென்று வைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய கட்சியின் கொள்கை சமஷ்டி அடிப்படையிலான மத்தியில் கூட்டு மாநிலத்தில் சுயாட்சி என கூறி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின், அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமஷ்டி, அதிகார பரவலாக்கலை புறக்கணித்து விட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழ் தலைவர்கள் இதை தொடர்ச்சியாக சொல்லி வருவது தேவையற்ற ஒன்று என்றும், நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செயற்படுத்த முடியாது என்பதை ஜனாபதி திட்ட வட்டமாக கூறியுள்ள நிலையில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தனது பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.