பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்; வவுனியாவில் இருவர் கைது..!

0

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருடன் சம்பவ இடத்திற்கு சென்ற இருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்படுத்தினர்.

இதையடுத்து அச்சந்தேகநபர்கள் இருவரையும் 10நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாலிக்குளம் 8ஆம் ஒழுங்கையிலுள்ள 15 வயது சிறுமி ஒருவர் வழமையாக தனது உறவினரின் வீடு ஒன்றிற்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

சம்பவ தினத்தன்று 10ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் தனது கற்றல் செயற்பாடுகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய சிறுமியை அப்பகுதியிலுள்ள இளைஞன், அருகிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன்போது அவருடன் சென்ற இருவர் அவருக்கு பாதுகாப்பிற்காக வெளியே நின்றுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமியை பொலிசார் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கையினையும் பெற்றுக் கொண்டனர்.

இச் சம்பவத்தினுடன் தொடர்புபட்ட பிரதான 26 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ளமை பொலிஸாருக்கு தெரிய வந்துள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.