உடைந்தது டெலோ; உதயமானது ஸ்ரீகாந்தாவின் புதிய கட்சி..!

0

தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தலைமையில் “தமிழ் தேசியக் கட்சி” என்ற பெயரில் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளராக மூத்த அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிவகுருநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏனைய செயலாளர்களாக இளைஞர்களும், பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் சட்டத்தரணியாக ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிதி, கல்வி, சமூக நல்லிணக்கம் போன்ற செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சிறீகாந்தாவின் இந்த அவசர முடிவால் யாழ் டெலோவின் வாக்கு வங்கியில் பாரிய பாதிப்பு இல்லாத போதும், புதிய தமிழ்க் கட்சிகளின் தொடர்ச்சியான வரவு என்பது தமிழர் அரசியலுக்கு ஆரோக்கியம் அற்றது.

அத்துடன் சிறீகாந்தா பாலியல் குற்றவாளிகளை தொடர்ச்சியாக காப்பாற்ற முனைவதால், மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் ஒரு அதிருப்தி அலை ஏற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

ஒருபுறம் சிறீகாந்தா, தமிழ்த் தேசியம் கதைத்தபடி மறுபுறம் தமிழ்த் தேசியத்தின் அடி நாதமாகிய கலாச்சார சீரழிவுகளையும், சிறுவர் துஸ்பிரயோகங்களையும் ஊக்குவிக்கின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.