வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்..!

0

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் நேற்று(சனிக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“வடகொரியா மீண்டும் முக்கியமான அணுசக்தி சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியாவில் பாதுகாப்பாக நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடகொரியா ரொக்கெற் ஏவுதள சோதனையில் இறங்கியுள்ளது என தென்கொரியா விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வட கொரியாவுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அன்று முதல் வடகொரியா மற்றும் தென்கொரிய உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் – கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய ஜனாதிபதி கிம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹனோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா – வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.