செல்வம் எம்பியா? சிறீகாந்தாவா? இன்னும் சற்று நேரத்தில் யாழில் பலப் பரீட்சை..!

0

ரெலோ அமைப்பிலிருந்து அந்த கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிலர் பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளனர். இதுவரை ரெலொவின் யாழ் மாவட்ட கிளையை அவர்களே கட்டுப்படுத்தியும் வந்திருந்தனர்.

ரெலோவின் யாழ் மாவட்ட கிளையின் 80 வீதமானவர்கள் தம்முடன் இருப்பதாக சிறிகாந்தா அணி தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலடியாக, யாழ் மாவட்ட உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் ரெலோவுடனேயே இருக்கிறார்கள் என கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தா அணியினர், யாழ் மாவட்ட கிளையிலுள்ளவர்களை இழுத்தெடுத்து புதிய கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று, மாலை 3 மணிக்கு கூட்டமொன்றிற்கு சிறிகாந்தா தரப்பு அழைப்பு விடுத்திருந்தது. ரெலோவின் யாழ் மாவட்ட கிளையிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கட்டாயம் வர வேண்டுமென தொலைபேசி வழியாக கட்டளை இடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குழப்படைந்துள்ள யாழ் மாவட்ட கிளையை சரி செய்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய ரெலோ திட்டமிட்டுள்ளது.

ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ரெலோவின் யாழ் மாவட்ட கிளையின் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து யாழ் மாவட்ட கிளை உறுப்பினர்களிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ரெலோவின் கூட்டம் காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சிறிகாந்தா தரப்பு தனது கூட்ட நேரத்தை மாற்றி, காலை 10 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது கூட்டத்திற்கு யாழ் மாவட்ட கிளையினர் கலந்து கொள்ள வேண்டுமென கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ரெலோவா, பிரிந்து சென்ற அணியா யாழில் பலமானது என்பது தெரிய வரும்.

இதேவேளை சிறீகாந்தா தொடர்ச்சியாக சமூக விரோதிகளுக்கு ஆதரவாக நீதிமன்றில் முன்னிலையாகி, குற்றவாளிகளை தப்பவைக்க முயல்வதால் யாழ் மக்கள் மத்தியில் சிறீகாந்தாவிற்கான ஆதரவுத் தளம் குறைந்துள்ளது.

அதேவேளை விக்கி தரப்பும் இவ்வாறான குழப்பவாதிகளை உள்ளெடுப்பது தொடர்பில் பின்நிற்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர் தமிழ்பொறிக்குத் தெரிவித்தார்.

ஆக கட்சியை உடைத்து வெளியேறும் சிறீகாந்தா தரப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது என்பதே நிதர்சன உண்மை.