படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பரிந்துரை..!

0

வானொலி மற்றும் தொலைக் காட்சிகளில் பாடல்களை வெளியிடும் போது படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் வழங்குவதற்கு கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வை சபை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைவாக தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாடலொன்றுக்கு ஜனவரி 1ஆம் தொடக்கம் 100 ரூபாவை படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவாக செலுத்த வேண்டும். இத் தொகை 2022 ஆண்டு தொடக்கம் 250ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் சபை பரிந்துரைத்துள்ளது.

இத் தொகை தொடர்பில் இறுதியாக் கலந்துரையாடி சகல முன் மொழிவுகளுடன் மீண்டும் டிசம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வானொலிகளில் ஒலிபரப்பப்படும் பாடலொன்றுக்கு எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் 30ரூபாவை படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவாக வழங்க வேண்டும் இத் தொகை 2022 ஆண்டு முதல் 50ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக 2020 ஜனவரி 03ஆம் திகதி சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பிலும் அன்றைய தினம் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளது.

இதேவேளை வானொலிகளில் ஒலிபரப்பப்படும் பாடலொன்றுக்கு 10ரூபாவும் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடலொன்றுக்கு 30ரூபாவும் உரிமைக்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு முன் வைக்கப்பட்ட யோசனையை மேற்பார்வை சபை நிராகரித்துள்ளது.

கலைஞர் ஒருவரின் அனுமதியின்றி யூடியூப் தளத்தில் பாடலொன்று ஒளிபரப்பப்பட்டால் அது தொடர்பில் தமது துறைசார் மேற்பார்வை சபையினால் சர்வதேச நிர்வாக பக்கங்களில் முறையிட முடியும் என்றும் சபையின் தலைவர் சுட்டிக் காட்டினார்.

எதாவது ஒரு அலைவரிசை ஒலி, ஒளிபரப்பும் பாடலுக்காக கலைஞர்களுக்கு படைப்புரிமைக் கொடுப்பனவை வழங்காவிட்டால் 2019 ஆண்டு ஜுன் 17ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட புலைமைச் சொத்து தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சபை தெரிவித்தது. கொடுப்பனவுக்கான செயற்பாட்டுக்காக பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அதேநேரம் ஏதாவது பணி தொடர்பில் சர்வதேச ஒப்பந்தமொன்றுக்கு கலைஞர்கள் செல்வதாயின் அது குறித்து புலமைச் சொத்துக்கள் பணியகத்திற்குத் தெரியப்படுத்துமாறும் சபை கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு தெரியப்படுத்துவதன் மூலம் கலைஞர்களுக்கு சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டியது. அழைப்பு ஒலிகளுக்காக (ஒரு ரிங்டோனைப் பதிவிறக்குவதற்ககு ) தரவிறக்கம் செய்யும் பாடலொன்றுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 30ரூபாவை அறவிடுவதற்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இணங்கிக்கொண்டன.

இதில் இணையதளத்திற்கு இதனை வழங்குவோருக்கு 30க்கும் 50 வீதத்தொகையையாவது கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் துறைசார் மேற்பார் சபை பரிந்துரைத்துள்ளது