வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை..!

0

விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள வழக்குகள் மற்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிவிப்புகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு அதன் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமது உறுப்பினர்கள் வெவ்வேறு வழக்குகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையாத வழக்குகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகள் மற்றும் அரச சட்டத்தரணிகள் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தாம் கவலையடைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுமாறும் தொழில் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில் தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது