கோட்டாபய, மகிந்த ஆட்சி இருக்கும் வரை கூட்டமைப்பால் எதையும் நகர்த்த முடியாது – அகரன்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் இன்று இருக்கக் கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவராவார்.

மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சி தனது 70ஆவது ஆண்டை பூர்த்தி செய்ய இருக்கின்றது. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களால் கிடைத்த சந்தர்ப்பம் போன்று வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ இப்படியொரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

கடந்த 18 வருடங்களாக கூட்டமைப்பினுடைய பெயரால் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா எடுத்த முடிவுகள் தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

குறிப்பாக யுத்தத்திற்கு பின் நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் எமது மக்களினதும், போராளிகளினதும் தியாகத்தை சரியாக கையாண்டு சர்வதேச சமூகத்துடனும், இலங்கை அரசாங்கத்துடனும் இராஜதந்திர ரீதீயாக அணுகாமல் வெறுமனே தமது கட்சியினுடைய சுயநல அரசியலுக்காகவும் தேர்தல்களுக்காகவும் பயன்படுத்தியதன் விளைவுதான் இன்று கோட்டாபய, மகிந்த மற்றும் ரணில் ஆகியோரை தலைமையாகக் கொண்ட இரண்டு பிரதான கட்சிகளுடனும் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாகவோ அபிவிருத்தி தொடர்பாகவோ எந்தவொரு துரும்பையும் நகர்த்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தேர்தல் காலத்தில் மட்டும் கூட்டமைப்பு தலைமைகளும், உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புகழ் பற்றியும் கூட்டமைப்பின் ஒற்றுமை பற்றியும் மேடைகளிலும், ஊடகங்களிலும் உணர்ச்சி பூர்வமாக பேசிவிட்டு தேர்தல் முடிந்தபின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணாகவும் பிரபாகரன் கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்று ஊடகங்களில் பேசுவது இவர்களின் வழமையான செயற்பாடு ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன நோக்கத்திற்காக கூட்டமைப்பை உருவாக்கினார்களோ அதை மறந்து அதற்கு எதிராக அரசுக்கு முண்டு கொடுத்து தாம் அற்ப சலுகைகளை பெற்றுக் கொண்டது மட்டுமன்றி மீண்டும் கூட்டமைப்பின் ஒற்றுமை எனும் பெயரால் மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளார்கள்.

மைத்திரி, ரணில் ஆட்சிக் காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இருந்த சந்தர்ப்பத்தைக் கூட தமிழ் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தாமல் அரசுக்கு பலதடவை நெருக்கடிகள் வந்தபோது தமிழ் மக்களின் நலனில் இருந்து முடிவெடுக்காமல் பணம் பதவிகளுக்கு விலைபோய் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இன்று நிற்கதியற்ற நிலைமைக்கு தமிழ் மக்களை தள்ளியுள்ளார்கள்.

இனிவரும் ஐந்து ஆண்டு காலம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளை (அரசியல் தீர்வு, நிலையான அபிவிருத்தி, போருக்கு பின் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு) போன்றவற்றிற்கு கோட்டாபய, மகிந்த ஆட்சி இருக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஊடாக எந்தவித பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முன்வரமாட்டார்கள்.

ஆகவே தமிழ் மக்களும், ஏனைய தமிழ் கட்சிகளும், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைவரும் இவ்விடயம் தொடர்பாக மிகுந்த கவனமெடுத்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழர்களின் இருப்பு காணாமல் ஆக்கச் செய்யப்படும் நிலையே காணப்படுகிறது.

மேலும் கூட்டமைப்பிற்குள் இருக்கும் நல்ல சக்திகள் அதிலிருந்து வெளியேறி புதிய மாற்று அரசியல் தலைமை ஒன்றுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். பலமான ஐக்கிய முன்னணி ஊடாகத் தான் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை காணமுடியும்.

தமிழ் மக்களும் தமிழ் தேசியத்தோடு இருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

-அகரன்