பின்தங்கிய பிரதேச மாணவர்களின் நலன் கருதி Z .Score முறை மறுசீரமைப்பு..!

0

பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் தற்போது அமுலில் உள்ள வெட்டுப் புள்ளி (Z.Score) முறையை மறுசீரமைக்க இருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

18 வருட நடைமுறையில் இருக்கும் தற்போதைய வெட்டுப் புள்ளி முறையில் மாற்றங்களை மேற்கொள்வதன் தேவை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தற்போது தேசிய ரீதியிலான திறமைகளின் கீழ் பல்கலைக் கழங்களுக்கு 40 சதவீதமான மாணவர்களே அனுமதிக்கப் படுகின்றனர் என்றும் சுட்டி காட்டினார்.

தற்போது மாவட்ட ரீதியில் 55 சதவீதத்தினரும், பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து மேலும் 5 சதவீதத்தினரும் இணைத்துக் கொள்ளப் படுகின்றனர். இதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு அநீதி இடம் பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மாவட்ட முறை அடிப்படையில் கொழும்பில் முன்னணி பாடசாலை மாணவர்களுக்கும் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே புள்ளி முறைமையே கடைப்பிடிக்கப் படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் 3,098 கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் உண்டு. இந்த பாடசாலைகளில் 101 பாடசாலைகளிலேயே உயர் தரத்தில் கணிதப் பாடம் கற்பிக்கப்படுகின்றது.

926 பாடசாலைகளில் உயிரியல் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகின்றது. 440 பாடசாலைகளில் தொழில்நுட்ப பாடம் கற்பிக்கப்படுகின்றது மற்றும் 360 பாடசாலைகள் கலைப்பிரிவு பாடம் கற்பிக்கப்படுவதாகவும்; அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த 55 சதவீதத்தினரை இணைத்துக் கொள்ள வெட்டுப்புள்ளி மறுசீரமைப்பின் கீழ் ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.