தலைநகர் டெல்லியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்குள்ள 6 மாடிக் கட்டிடத்தில், தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், அதே கட்டிடத்தில் தங்கியிருந்துள்ளனர். இந்த 6 மாடிக் கட்டிடத்தில், இன்று அதிகாலை 5 மணிக்கு பிறகு தீ விபத்து நேரிட்டுள்ளது.

இதுகுறித்து, 5.22 மணிக்கு, டெல்லி தீயணைப்புத் துறைக்கு, முதல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், அங்கு சென்ற டெல்லி தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தின்போது, அபய குரல் எழுப்பியவர்கள், மயக்க நிலையில் இருந்தவர்கள் என, 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே தீயணைப்புத் துறையினரால் மீட்க முடிந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில், 43 பேர் உடல்கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். பலியானவர்களில் பலரும், உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, உயிரிழந்ததாக, டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், லோக் நாயக், ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

செயின் ஸ்டீபன் முதல் ஜான்தேவாலன் பகுதி வரையிலான, ராணி ஜான்சி சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, மாற்று பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை டெல்லி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.