ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..!

0

பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்த ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தை அரச பல்கலைக் கழகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உடன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவை ஜனாதிபதி நேற்றைய தினம் உயர்கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனை பணித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சவூதி அரேபியாவின் அமைப்புக்களின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மட்டக்களப்பில் ஷர்யா பல்கலைக் கழகம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

குறித்த பல்கலைக் கழகத்திற்கு எதிராக பலவழிகளிலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அதனை அரசுடமையாக்குவதற்கு இடமளிக்க முடியாது என ஹிஸ்புல்லா பலதடவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவினால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.