மகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..!

0

பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சாவைக் கட்சியிலிருந்து நீக்கியதாகக் கூறி தேர்தல்கள் ஆணையகத்திற்கும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் இன்று (05) கடிதம் அனுப்பி வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டது.

இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸியைக் கட்சியிலிருந்து நீக்கியதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல்கள் ஆணையகத்திற்குஅறிவித்திருந்தது.

ஏனைய கட்சிகளுடன் தொடர்புவைத்திருந்ததாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திசாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமைகளை அடுத்த வாரம் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அடுத்த வாரம் கூட்டமொன்றைக் கூடவுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

அக்கூட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 35 பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிடுகின்றார்.

மொட்டுக் கட்சியால் ஸ்ரீலங்கா சுதந்திர் கட்சியும் அதன் தலைவர் மைத்ரிபால சிரிசேனவும் திட்டமிட்டடு ஓரங்கட்டப் பட்டதன் எதிரொலியாகவே இப் பதவி நீக்கங்கள் இடம் பெறுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மகிந்தவிற்கு மறைமுகமாக செய்தியொன்றை மைத்ரி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகிந்த உட்பட மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது பிடியும் தன்னிடமே உள்ளது என்பதாகும்.