அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி..!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட மாட்டார். எனினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரி போட்டியிட்டு பின்னர் பாராளுமன்றம் வருவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வார் எனவும் ஊழலற்ற தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் பொதுச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் மைத்ரி நாடாளுமன்றம் வருவதற்கு தயாராக இருந்த போதும் அவருக்காக பதவி விலகுவதற்கு எவரும் தயார் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பலரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு அவர்கள் உரிய பதிலை வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த மைத்ரி எதிர்வரும் நான்கு மாதங்கள் பொலநறுவையில் கழிக்கவுள்ளார்.

இதேவேளை தனக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பங்களை கோட்டை விட்ட மைத்ரி அப்பம் சாப்பிட்டு முதுகில் குத்தியமையால் மகிந்த தரப்பாலும், 52 நாள் ஆட்சிக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தமையால் ரணில் மற்றும் சந்திரிக்கா தரப்பாலும், கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் சொந்தக் கட்சியாலும் ஓரங்கட்டப் பட்டுள்ளார்.

மைத்ரியின் அரசியல் எதிர்காலம் இத்துடன் நிறைவுக்கு வருவதாகவே அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.