அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க முடி­யுமா?

0

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் ட்ரம்பிற்கு சவா­லாக முன்னாள் துணை ஜனா­தி­பதி ஜோ பிடன் மக்­க­ளாட்சிக் கட்சி சார்பில் போட்­டி­யி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அவர் மீது சேறு பூச ட்ரம்ப் பல வகை­களில் முயற்சி செய்தார் எனக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. ட்ரம்பின் நட­வ­டிக்­கைகள் அமெ­ரிக்கத் தேர்­தலில் மற்ற நாடு­களை தலை­யிட தூண்டும் வகையில் அமைந்­துள்­ளன என அவ­ரது எதிர்க்­கட்­சி­யினர் கொதிக்­கின்­றார்கள்.

சீனாவில் ஒன்­றரை பில்­லியன் சுருட்­டப்­பட்­டதா ?

ட்ரம்ப் சீனா­விடம் ஜோ பிட­னி­னதும் அவ­ரது மனை­வியின் முதற்­தார மகன் ஹண்டர் பிட­னி­னதும் சீன முத­லீ­டுகள் தொடர்­பாக விசா­ரித்து தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும்­படி கோரினார் எனக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

இது அமெ­ரிக்கத் தேர்­தலில் ஒரு வெளி­நாட்டைத் தலை­யி­டும்­படி தூண்­டு­வ­தாக அமை­கின்­றது என்­கின்­றனர் ட்ரம்பின் எதிர்க்கட்­சி­யினர். அதற்கு போதிய ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. தன் பெயர் குறிப்­பிட விரும்­பாத ஒருவர் ட்ரம்­பிற்கும் சீன ஜனா­தி­பதி ஜி ஜின் பிங்­கிற்கும் இடையில் தொலை­பேசி உரை­யா­டலில் ஹண்டர் பிட­னிற்கு சீனாவில் இருக்கும் முத­லீ­டுகள் பற்றி பகி­ரங்­கப்­ப­டுத்­தும்­படி வேண்­டுகோள் விடுத்தார் என அமெ­ரிக்க ஊட­க­மொன்­றுக்கு தெரி­வித்தார் என்­பது போதிய ஆதா­ர­மாக இல்லை.

2019 செப்­டெம்­பரில் ட்ரம்ப் வெளி­யிட்ட கருத்தில் ஹண்டர் பிடன் சீனாவில் ஒன்­றரை பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான சொத்தை வைத்­தி­ருக்­கின்றார் எனக் குற்றம் சாட்­டினார். சீனா­வி­லி­ருந்து நிதியை வெளி­நாட்­டுக்கு எடுத்துச் செல்­வது மிகவும் கடி­ன­மாக இருக்கும் நிலையில் ஹண்டர் மிக இல­கு­வாக அந்த ஒன்­றரை பில்­லியன் நிதியை எடுத்து வந்­து­விட்டார் என்றார் ட்ரம்ப்.

யுக்­ரைனில் முறை­கே­டான முத­லீடா ?

பராக் ஒபாமா ஜனா­தி­ப­தி­யா­கவும் ஜோ பிடன் துணை ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்த போது யுக்­ரைனில் பல பிரச்­சி­னைகள் உரு­வா­கின. அந்தப் பிரச்­சி­னையால் யுக்­ரை­னிற்கு ரஷ்­யாவிலிருந்து வரும் எரி­வாயு விநி­யோகம் பாதிக்­கப்­பட்­டது.

இதை முன் கூட்­டியே அறிந்த அமெ­ரிக்க துணை ஜனா­தி­பதி தனது மக­னான ஹண்டர் பிடனை யுக்­ரைனில் எரி­வாயு நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்யப் பண்­ணினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ரஷ்யா யுக்­ரைனின் கிறி­மியா தீப­கற்­பத்தை தன்­னுடன் இணைத்து ரஷ்­யர்கள் பெரும்­பா­லாக வாழும் யுக்­ரைனின் கிழக்குப் பகு­தியில் பிரி­வினைப் போராட்டம் ஆரம்­ப­மா­னது. அதனால் ஹண்டர் பெரு­ம­ளவு பணம் சம்­பா­தித்தார் என்­பது ட்ரம்பின் தரப்­பி­லி­ருந்து வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு.

ட்ரம்பும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பிடன் தனது மகன் ஹண்­டரின் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக விசா­ரிக்கும் யுக்­ரைனின் வழக்குத் தொடு­நரை பதவி நீக்கம் செய்­யும்­படி யுக்ரைன் ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­தினார் என வாதி­டு­கின்­றனர்.

ஜோ பிடன் இப்­படி செய்யும் போது அவர் அமெ­ரிக்­காவின் துணை ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாராம். ஹண்டர் பிடன் யுக்­ரைனின் எரி­வாயு நிறு­வ­னத்தின் ஆலோ­ச­க­ராக இருந்து 3.4மில்­லியன் டொலர்கள் சம்­பா­தித்தார் இதற்­காக அவர் யுக்ரைன் சென்­றது கூடக் கிடை­யாது என்­பது அவர்­மீது வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு.

யுக்­ரைனின் எரி­வாயு விநியோகம்

வழங்­காத ஜவலின் ஏவு­க­ணைகள்

யுக்­ரைனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்த போது யுக்­ரை­னுக்கு அமெ­ரிக்­காவின் FGM-148 Javelin ஏவு­க­ணை­களை வழங்கும் படி ஜனா­தி­பதி ஒபா­மாவை துணை ஜனா­தி­பதி ஜோ பிடன் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அந்த ஏவு­க­ணைகள் ரஷ்யா யுக்­ரை­னுக்கு அனுப்­பிய தாங்­கி­களை நிர்­மூலம் செய்யக் கூடி­யவை.

ஜவலின் ஏவு­க­ணை

ரஷ்­யா­வுடன் பகை­மையை வளர்க்க விரும்­பாத ஒபாமா அந்தக் கோரிக்­கையை ஏற்­க­வில்லை. அதைத் தொடர்ந்து யுக்­ரை­னுக்கு ஜோ பிடனை அனுப்­பிய ஒபாமா யுக்­ரை­னுக்கு காத்­தி­ர­மான உறுதி மொழி எதையும் வழங்க வேண்டாம் எனவும் சொல்­லி­யி­ருந்தார். அப்­போது யுக்ரைன் ஊழல் நிறைந்த நாடாக இருந்­தது. அதில் ஊழல் நிறைந்த எரி­வாயு நிறு­வ­னத்தின் ஆலோ­ச­க­ராக ஹண்டர் பிடன் நிய­மிக்­கப்­பட்டார்.

வழங்­க­வி­ருந்த ஜவலின் ஏவு­க­ணைகள் நிறுத்­தமா ?

2019 ஜூலை 10 ஆம் திகதி யுக்­ரைனின் புதிய ஜனா­தி­ப­தியின் பிர­தி ­நி­திகள் வெள்ளை மாளி­கையில் டொனால்ட் ட்ரம்பை சந்­திக்­கின்­றனர். ஆனால், அவர்கள் எதிர்­பார்த்த உத­விகள் கிடைக்­க­வில்லை. பின்னர் 25 ஆம் திகதி ட்ரம்ப் யுக்ரைன் ஜனா­தி­பதி விளா­டிமிர் ஜெலென்ஸ்­கி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டு­கின்றார்.

2019 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வெள்ளை மாளி­கையைச் சேர்ந்த ஒருவர் அமெ­ரிக்க உளவு சமூ­கத்தின் கண்­கா­ணிப்­பாளர் நாய­கத்­திடம் ஒரு முறைப்­பாடு செய்­கின்றார். அந்த முறைப்­பாட்டில் யுக்ரைன் ஜனா­தி­ப­தி­யுடன் ட்ரம்ப் செய்த உரை­யா­டலில் ஜோ பிடன் செய்த ஊழல்கள் பற்றி அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டு­மென நிர்ப்­பந்­தித்­த­தா­கவும் அதை மறுத்த போது ட்ரம்ப் யுக்­ரை­னுக்கு வழங்க இருந்த ஜவலின் ஏவு­க­ணை­களை வழங்­கு­வதை நிறுத்­தி­ய­தா­கவும் சொல்­லப்­பட்­டி­ருந்­தது.

ஜவலின் ஏவு­க­ணை

இங்கு ட்ரம்ப் இரண்டு குற்றச் செயல்­களை செய்­த­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. ஒன்று அமெ­ரிக்கத் தேர்­தலில் தலை­யிட வெளி­நாடு ஒன்றைத் தூண்­டி­யது. அதை மறுத்த போது அந்த நட்பு நாட்­டுக்கு ஆபத்து விளை­விக்கக் கூடிய முடிவை எடுத்­தது.

இந்த அடிப்­ப­டையில் ட்ரம்பின் எதிர்க்­கட்­சி­யான மக்­க­ளாட்சிக் கட்­சியின் கட்­டுப்­பாட்டில் உள்ள அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் மக்­க­ள­வையில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முன்­மொ­ழிவு வைக்­கப்­பட்­டது.

அதை­யொட்டி ட்ரம்ப் மீது விசா­ரணை செய்ய மக்­க­ளவை முடிவு செய்து விசா­ர­ணையை ஆரம்­பித்­தது. ட்ரம்­பிற்கு எதி­ராக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்­கான அமெ­ரிக்கத் தூதுவர் மற்றும் யுக்­ரை­னிற்­கான அமெ­ரிக்கத் தூதுவர், யுக்ரைன் தொடர்­பான அமெ­ரிக்கப் படைத்­துறை நிபுணர் போன்­ற­வர்கள் விசா­ரிக்­கப்­பட்­டனர்.

பதவி நீக்க விசா­ரணை

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியைப் பதவி நீக்கம் செய்­வது இல­கு­வான ஒன்­றல்ல முதல் அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் மக்­க­ள­வையில் ஒரு முன் மொழிவு செய்­யப்­பட்டு அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். அக்­குற்றச்சாட்டு நீதிக்­கான குழு அல்­லது ஒரு சிறப்புக் குழுவால் விசா­ரிக்­கப்­பட வேண்டும். நீதி விசா­ரணைக் குழு சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் தீர்­மா­னத்தை அங்­கீ­க­ரிக்க வேண்டும் .

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­மானம் மக்­க­ள­வையில் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்டு , அது சாதா­ரண பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும். பின்னர் பாரா­ளு­மன்­றத்தின் மூத­வையில் விசா­ரணை நடை­பெறும். அதில் மக்­க­ளவை உறுப்­பி­னர்கள் சாட்­சி­யங்­களை சமர்ப்­பிப்பர்.

தலைமை நீதி­ய­ரசர் மூதவை விசா­ர­ணைக்கு தலைமை தாங்­குவார். மூத­வையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மை­யுடன் குற்­ற­வாளி என முடிவு செய்ய வேண்டும். அப்­போது குற்றம் சாட்­டப்­பட்ட ஜனா­தி­பதி பத­வி­யி­ழப்பார்

முன்­னைய பதவி நீக்க முயற்­சிகள்

இதற்கு முன்பு அண்­டுரு ஜோன்சன் மற்றும் பில் கிளிண்டன் ஆகி­யோரை பதவி நீக்க முயற்­சிக்­கப்­பட்­டது. இரு­வ­ரையும் பதவி நீக்க அமெ­ரிக்க மக்­க­ளவை முடி­வெ­டுத்­தது. ஆனால் இரு­வரும் மூத­வையால் விடு­விக்­கப்­பட்­டனர்.

1868இல் ஜோன்சன் மீது போர் அமைச்­சரைப் பதவி நீக்கம் செய்­தது சட்ட விரோதம் என்ற குற்றம் சுமத்­தப்­பட்­டது. அவர் மூத­வையில் ஒரு வாக்கால் தப்­பித்தார்.

1999 இல் நீதிக்கு முன் பொய் சொன்ன குற்­றச்­சாட்டு பில் கிளிண்டன் மீது சுமத்­தப்­பட்­டது. மூத­வையில் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆத­ர­விற்கு 22 வாக்­குகள் போதாமல் இருந்­தன.

ட்ரம்பை விசா­ர­ணைக்கு அழைப்பு

ட்ரம்­பிற்கு எதி­ரான விசா­ர­ணையில் வந்து ட்ரம்பைத் தோன்றும் படி மக்­க­ள­வையின் நீதித்­து­றைக்­கான குழுவின் தலைவர் ஜெரால்ட் நட்லர் அழைப்பு விடுத்ததுடன், வந்து விசாரணையில் பங்கு கொள்ளுங்கள் அல்லது விசாரணையைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள் என்றும் சொல்லியுள்ளார். விசாரணையில் பங்கு பற்றி சாட்சிகளை அவர் கேள்விகளும் கேட்கலாம் என்றார் அவர்.

ஜெரால்ட் நட்லர்

மூதவை ட்ரம்பை பாதுகாக்கும்

ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டை மக்களவை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதை மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியாது.

நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் ட்ரம்பின் குடியரசு கட்சியினர் 53பேரும் எதிர்க் கட்சியான மக்களாட்சிக் கட்சியில் 47பேரும் உள்ள நிலையில் ட்ரம்பை குற்றவாளியாக மூதவையில் முடிவு செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு.

வேல்தர்மா