BRIGHT FUTURE INTERNATIONAL நிறுவனத்தின் உதவி வழங்கும் நிகழ்வு..!

0

30.11.2019 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில்
நல்வாழ்வு மேம்பாட்டு நிலையம் புலோப்பளை கிழக்கு, பளையில் பிரதம விருந்தினர் உரை

இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களேஇ நல்வாழ்வு மேம்பாட்டு நிலைய உறுப்பினர்களே, BRIGHT FUTURE INTERNATIONAL நிறுவனத்திலிருந்து வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே, இந்த அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற நலன் விரும்பிகளே, இன்று வழங்கப்படுகின்ற உதவி பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருக்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட எமது அன்பு உள்ளங்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

BRIGHT FUTURE INTERNATIONAL நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன். எமது தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்வூக்கு BRIGHT FUTURE INTERNATIONAL தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

இந்த நாட்டில் குறிப்பாக வடபகுதியில் உலக நாடுகள் பலவற்றின் மறைமுக அனுசரணையுடன் அரங்கேறிய மாபெரும் இன அழிப்பு யுத்தத்தினால் இறந்தவர்கள் போக எஞ்சியூள்ள பல்லாயிரக்கணக்கான எமது மக்கள்இ உடல் அவயவங்களை இழந்தும், பொருள் பண்டம், வீடு வளவு, பிள்ளை குட்டிகள் என அனைத்தையும் இழந்த நிலையில் நடைப்பிணங்களாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எமது பகுதிகளில் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இம்மக்களை இந் நிலைக்கு ஆளாக்கியவர்கள் யுத்தத்தின் பின்னராவது இம்மக்களுக்கான உதவிகள், நிவாரணங்கள், இழப்பீடுகள் என எதையும் வழங்காது தாம் புரிந்த யுத்தம் தர்ம யுத்தம் எனவூம் யுத்தத்தில் அழிக்கப்பட்ட அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்களே எனவும் அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் பொது மக்கள் ஒருவர் கூட பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்ற பாணியில் சர்வதேச அரங்குகளில் தம்மை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இந் நிலையில் இம்மக்களின் துயர்களில் தாமும் கலந்து கொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்க முன் வந்திருக்கின்ற எமது கடல் கடந்த உறவுகளுக்கு இம்மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

புலம் பெயர்ந்த எம் மக்கள் எமது உறவுகளே!

இன்று நல்ல நிலையில் இருக்கும் எமது உறவுகள் எமது நலிவடைந்த உறவுகளுக்கு உதவ முன் வந்திருப்பது போற்றப்பட வேண்டும்.

நான் முதலமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அதாவது 2013 – 2018 வரை தேவையுடைய மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளின் ஊடாகவும், வெளிநாட்டு உதவிகளின் மூலமாகவும், உள்நாட்டில் காணப்படக் கூடிய பரோபகாரிகளின் உதவிகளினூடாகவும் பல்வேறு வீடமைப்புக்கள், கால் நடை, கோழி வளர்ப்பு, சுய தொழில் முயற்சி என பலதரப்பட்ட வேலைகளுக்கான நிதிகளை வழங்கியிருந்தேன்.

ஒரு சில கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பெறுநர்களினதும் முயற்சிகள் வாழ்த்துக்குரியனவாக மேம்பட்டிருந்ததை அக்காலத்தில் உணரக்கூடியதாக இருந்தது.

உதவிபெற்று உய்ந்த எமது உறவுகள் எம்மை நாடிவந்து வாழ்த்திச் சென்றார்கள். அவர்களின் உளங் கனிந்த உண்மையான வாழ்த்துக்களே எம்மை இன்னமும் அரசியல் அரங்கில் நிலைபெற வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் உதவிகள் போதுமானவரை கிடைக்கப் பெறாவிட்டால் என்ன, எமது உடன்பிறப்புக்களை அள்ளி அரவணைத்து அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கி அதன் மூலமாக அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை இவ்வாறான அமைப்புக்கள் மூலமாக எமது புலம்பெயர் உறவுகள் எமக்குத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நாதியற்ற நிலையிலும் இவ்வாறாக மனமுவந்து மேற்கொள்ளப்படுகின்ற உதவிகளே எமது மக்களை இத்தனை இழப்புக்களின் பின்னரும் ஓரளவிற்காவது நிமிர்ந்து நிற்க உதவி செய்கின்றன.

இவர்களின் உதவிகளை மனமகிழ்வுடன் பெறும் நாம் இரண்டு பொறிகளுக்குள் அகப்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்று மற்றவர்களிடம் கையேந்தும் நிலையை எமது பழக்கமாக ஆக்கிக்கொள்வது. இது எம்மை சோம்பேறிகளாக ஆக்கிவிடும்.

மற்றையது படாடோபங்களுக்கு இடம் கொடுப்பது. இன்றைய எமது பெறுநர்களை இது குறிக்காது. ஆனால் பலர் யாரோ தரும் கொடைகளை வைத்துத் தம் சுற்றத்தாருக்கு பந்தா காட்டும் நிலைமையை சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த நிலைமையை நாம் தவிர்க்க வேண்டும்.

எமக்கு உதவிபுரிபவர்கள் யாவரும் வெளிநாட்டுப் பெரும் பணக்காரர்கள் என்று நாம் நினைக்கக்கூடாது. எமது புலம் பெயர் உறகள் வெளிநாடுகளில் திரவியங்களைத் தோண்டி அள்ளுகின்றார்கள்; அவற்றில் ஒரு பகுதியை எமக்கும் வழங்குகின்றார்கள் என எவரும் எண்ணிவிடக் கூடாது.

அந்த நாடுகளில் கடும் குளிரிலும், மழையிலும், பனியிலும், இரவு பகலாக இரண்டு அல்லது மூன்று வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தமது குடும்ப பாரத்தைச் சுமப்பதற்கு மேலதிகமாக ஒரு சிறிய தொகைப் பணத்தை மீதப்படுத்தி அதனையே எமக்கு அனுப்புகின்றார்கள் பலர் என்ற உண்மையை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமது உறவுகளை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தமது உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பொருள் தேட்டம் மேற்கொள்வதற்குமாக சென்றவர்கள் எமது புலம்பெயர் உறவுகள். அவர்கள், குறிப்பாக எமது வெளிநாட்டு இளைஞர் யுவதிகள், இவ்வளவு பொறுப்புடன் செயலாற்றுவது பெரும் மதிப்பிற்குரியது. அவர்கள் மூலம் வரும் நன்மைகளை இறைவன் தந்த கொடையாக ஏற்றுக் கொண்டு சிக்கனமாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

மேலதிகமாகப் பணம் உங்களுக்கு கிடைத்தால் உங்களைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவழிக்க முன் வாருங்கள்.

இன்றைய நிலையில் எமது நாட்டின் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக் கூடிய எமது எதிர்கால நெருக்கடிகளை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நாட்டு நடப்புகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும். பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. எமது உள்ளுர் உற்பத்திகள் கூட பல மடங்கு விலையில் உள்ளுரில் விற்கப்படுகின்றன. காரணம் நாம் எவரும் எமது உற்பத்திப் பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான எந்தவொரு தொழில் முயற்சியிலும் இதுவரை இறங்கவில்லை என்ற பேருண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வட பகுதியின் முதற்தர விவசாய அறுவடையாகக் காணப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை 400 ரூபாவிற்கும் அதிகமாகிவிட்டது. மரக்கறி விலை, மீன் விலை, கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை என அனைத்துமே உச்ச நிலைக்கு அதிகரித்து விட்டது.

நாம் தொடர்ந்து கண்மூடி மௌனிகளாக இருப்போமாயின் எஞ்சியுள்ள எமது சின்னஞ் சிறுசுகளையும் இழக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

பஞ்சம், பட்டினி நிலை ஏற்படுவதை விட எமது இளஞ்சமுதாயம் பிற நாடுகளை நோக்கி ஓடும் நிலை நிலைத்து விட்டால் தமிழர்களாகிய நாங்கள் யாருக்காகப் போராட வேண்டும்?

இன்று தெற்கில் இருந்து அரசாங்கம் பெருவாரியாக சிங்கள மக்களை எமது பல்கலைக் கழகங்களுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பும் நிலை ஏற்பட்டமைக்கு காரணம் எமது இளஞ் சமுதாயம் எம்மை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால்தான் ஏற்பட்டது என்றால் என் கூற்று பிழையாகுமா? அரச நடவடிக்கைகளுக்குப் பயந்தே தாம் போவதாகச் சிலர் கூறுவார்கள்.

அப்படியானால்; அரசாங்கக் கெடுபிடிகள் வேண்டுமென்றே நீடித்தால் எமது வடக்கையும் கிழக்கையும் நாம் யாவரும் விட்டு ஏகும் நிலை ஏற்படுமா? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது உதயமாகியுள்ளது.

எனவே எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்குச் சமாந்தரமாக இப்பகுதியில் உள்ள இளைஞர் படை அணியினரை ஒன்று திரட்டி, கிராமம் கிராமமாக அவர்களின் அமைப்புக்களை உருவாக்கி, இளைஞர் அணிகள் மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பலவேலைத்திட்டங்கள் அவசரமும் அவசியமானவையாகியுள்ளன.

விடயங்களை இலகுவில் விளங்கிக்கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இளைஞர் அணிகளே ஏற்ற மன மற்றும் உடல் வலிமைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இற்றைக்கு சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் LAND ARMY என்ற தரைப்படை அமைப்பு ஒன்று அக்காலத்தில் அரசினால் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்கள் மூலமாக வன உருவாக்கம் போன்ற பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அன்று நாட்டப்பட்ட தேக்கு மரங்கள் இன்று பாரிய மரங்களாக எமது கண்முன் காட்சியளிக்கின்றன. அதேபோல பாடசாலைகளில்; மாணவர்களுக்கிடையே மரம் நடுகைப் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு இடங்களிலும் மலை வேம்பு, தேக்கு, வேப்பங்கன்றுகள் எனப் பல்வேறு மரங்கள் அவரவர் வீடுகளில் அந்தக் காலத்தில் நாட்டப்பட்டன.

திறமையாகக் கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. அன்று வழங்கப்பட்ட ஊக்கம் இன்று எமது பகுதியில் பல நூற்றுக்கணக்கான மலை வேம்புகள் உருவாவதற்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால் போர்க்காலத்தில் அவற்றுள் பல, தரம் கெட்டவர்களால் தறிக்கப்பட்டமையும் உண்மைதான்.

ஆகவே இன்றைய நிலையில் எமது பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டுத்தோட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எத்தனையோ பெரிய தோட்டக்காரர்கள் தமது பயிர்ச் செய்கைகளை இடை நிறுத்தி வாழாவிருக்கின்றார்கள்.

காரணம் இன்றைய சூழலில் கூலியாட்களின் சம்பளக் கொடுப்பனவுகளை வழங்க முடியாதளவுக்கு சம்பளங்கள் உயர்ந்துள்ளன.

எனவே பெரியளவிலான விவசாய முயற்சிகளுக்குப் பதிலாக ஒவ்வொரு வீடுகளிலும் பயிரிடப்படுகின்ற 25 கத்தரிக்கன்றுகள், 25 மிளகாய் கன்றுகள், பயற்றை, புடோல், வெண்டி, பாகல் என பல்வேறு மரக்கறி வகைகளை உற்பத்தி செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் பண்டமாற்று முறையில் தமது உற்பத்திகளை பகிர்ந்துகொள்ளலாம்.

இதைத்தான் எமது மூதாதையர்கள் செய்தார்கள். எமது மூதாதையர்களின் வழிகாட்டலில் நாங்கள் வாழத் தலைப்பட்டால் மாத்திரமே அரசின் கெடுபிடிகளில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

தமிழர்களுக்கான சுயாட்சி அதிகாரங்களை வழங்க அரசுகள் மறுக்கின்ற போது நாங்களும் தனிப்பட்ட ஒரு இனமாக எமது தேவைகளை நாமே நிறைவேற்றக்கூடிய ஒரு சமூகமாக மாறுவதன் மூலம் அரசின் கவனத்தை எம்பால் ஈர்க்க முடியும். நாங்கள் தன்நிறைவு பெற முன்வர வேண்டும்.

எம்மை நாமே சார்ந்து நின்று வேலைகளைச் செய்யப் பழகிக்கொண்டால் தன்னிறைவு தானே வந்தமையும். இது கொள்கையளவில் நடைமுறைச் சாத்தியமற்றது என உங்களில் பலர் எண்ணக் கூடும். ஆனால் கத்தியின்றி, இரத்தமின்றி, தன்னம்பிக்கையுடன், பொறுமையுடன் நாம் புரியப்போகின்ற யுத்தம் நிச்சயம் அரசை எம்பால் திரும்ப வைக்கும்.

எமது தன்னம்பிக்கையே எம்மை வாழ வைக்கப் போகின்றது என்பதை மறவாதீர்கள். ஆயுதம் ஏந்தியவர்கள் ஒரு அரசாங்கத்தையே முப்பது வருடங்கள் ஒதுக்கி வைத்து வாழக் கூடுமானதாக இருந்திருந்தால் அதற்கு அவர்களின் தன்னம்பிக்கையே காரணம் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகின்றேன்.

அடிப்படையில் நாம் பல்வேறு மாற்றங்களை உடனடியாக அமுல்படுத்த முன்வர வேண்டும். சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே இன முறுகல் ஏற்பட்ட போது சிங்கள் மக்கள் அனைவருக்கும் சிங்கள மக்கட் தலைவர்களால் ஒரு செய்தி வழங்கப்பட்டது.

அதாவது முஸ்லீம் வர்த்தகர்களின் கடைகளில் எந்தவித பொருட்கொள்வனவும் மேற்கொள்ள வேண்டாம் என்று. அது முஸ்லீம் வர்த்தகர்களை வெகுவாகப் பாதித்தது.

இவ்வாறான செயல்களில் இருந்து நாம் பாடங்கள் பல கற்றுக் கொள்ளலாம். பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் பிறரின் வர்த்தக ஆக்கிரமிப்புக்களை இடைநிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெற்கு எமக்கு பாடம் கற்றுத்தந்துள்ளது.

ஏன், இன்றைய ஜனாதிபதியைப் பெரும்பாலும் தமது வாக்குகளின் மூலமாகவே தென்னவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

நாமே அரசினை ஆக்குஞ் சக்திகள் என்று மார்தட்டிய எம்மவர்கள் பலர் வாயடைத்துப் போயுள்ளார்கள். இவையாவும் எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

நாம் தொடர்ந்து எமது மக்களை எவ்வாறு அபிவிருத்திப் பணியில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதை எமது கட்சி பரிசீலித்து வருகின்றது.

“தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு” என்ற தொண்டு அமைப்பு ஒன்றை அண்மையில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தொண்டு அமைப்புக்கள் மற்றும் ஏனைய நன்கொடை அமைப்புக்களின் உதவிகளுடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் எமது இந்த முயற்சிக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவை அனைத்தையும் பற்றி விலாவாரியாக இச்சந்தர்ப்பத்தில் கூறமுடியாத போதும் எமது தொடர் முயற்சிகள் இளைஞர் படை அணிகள் ஊடாக சிறப்பாக செயற்படுத்தப்படும் என்பதைச் சொல்லி வைக்கின்றேன். அதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய முழு ஒத்துழைப்புக்களை வழங்கி எமது திட்டங்கள் நிறைவேற உதவுவீர்கள் என நம்புகின்றேன்.

சற்று முன் வீட்டுத் தோட்டங்கள் பற்றி உங்களுக்கு கூறியிருந்தேன். நான் என்னை உதாரணமாக வைத்தே அவ்வாறான அறிவுரைகளை வழங்கினேன். நான் அரசியலுக்கு வரமுன் எனது ஓய்வுற்ற காலத்தில் எனது கொழும்பு 7 வீட்டின் 2ம் மாடியில் மண் நிரப்பி புற்றரை ஒன்றை உண்டாக்கியிருந்தேன். அங்கு பலவித மரக்கறிச் செடிகளை தொட்டிகளில் வளர்த்துப் பயன் கண்டேன்.

வரும் பயன்கள் எமது பாவிப்புக்கு அதிகப்படியாக இருந்தபோது அவற்றை விற்றோம். நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டோம். வீட்டுத் தோட்டங்கள் எமது மனதிற்கு நிறைவைத் தந்தன. நாளாந்த உணவுத் தேவைகளை அவை உறுதி செய்தன. மரக்கறிகள் அன்றன்று கிடைக்க அவை வழி அமைத்தன.

அரசியலுக்கு வந்ததால் நான் இழந்த பலவற்றுள் இவையும் ஒன்று! எனினும் “தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்ற முறையிலேயே உங்களுக்கு வீட்டுத் தோட்டங்கள் பற்றி அறிவுரைகளை வழங்கியிருந்தேன்.

படித்தவர்கள், பாமரர்கள் என்ற வித்தியாசமே இல்லாமல் ஒரு கொஞ்சம் இடம் கிடைத்தாலும் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கிப் பயன்பெறலாம்.

இறுதியாக இன்றைய நிகழ்வில் உதவிகளைப் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் பெறுநர்களும் இந்த உதவிகளினூடாக தமது வாழ்வில் முன்னேற்றமடைய வாழ்த்துகின்றேன்.

எமது மக்கள் தமது வாழ்வைத் தாமே உயர்த்த முன் வரவேண்டும் என்று பிரார்த்தித்து தன்னாட்சி, தற்சார்பு, தன்நிறைவு என்ற எமது தாரக மந்திரத்தை உரக்கக்கூறி எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி