வடக்கில் மாவீரர் தினம்; பாதுகாப்பு செயலாளரின் முக்கிய கருத்து..!

0

மாவீரர் தினத்தை வடக்கில் அனுட்டித்ததில் எந்த சட்ட மீறல்களும் நடக்கவில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறோம் என தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

கண்டியில் உள்ள மால்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்றும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

“இராணுவம் எங்கு வேண்டுமானாலும் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. எனவே, யாருடைய சொல்லின் படியும் தேசிய பாதுகாப்பு குறைக்கப்படாது. யாருடைய நலனுக்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது.

இராணுவத் தளங்கள் இருப்பது யாரையும் புண்படுத்தவில்லை, இது மக்களுக்கான சேவை.

யுத்த காலங்களில் கூட, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த பகுதிகளின் மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.

ஏழைகளின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தவும் நாங்கள் உதவியுள்ளோம்.

விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார்.