‘கட்டப்பா’ கதாபாத்திரத்தை சத்யராஜ் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது..!

0

‘கட்டப்பா’ கதாபாத்திரத்தை சத்யராஜ் தவிர இந்தியாவில் வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தம்பி’ திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இத் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது:

“தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதை நாங்கள் இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறோம். சினிமாவில் பெரிய திறமை தேவையில்லை, ஆனால் ஒழுக்கம் வேண்டும் என அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்.

சத்யராஜ், காலை, மாலை என இருவேளையிலும் உடற் பயிற்சி செய்வார். அப்படி செய்ய முடியவில்லையென்றால், கேரவனுக்குள்ளேயே நடப்பார்.

உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரால் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தை நடித்திருக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தை இந்தியாவில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது.

அவரது வீட்டில் ஒருமுறை ரூ.5 லட்சத்தை திருடர்கள் திருடி விட்டனர். அதற்கு வீட்டிலிருந்தவர்கள் கவலையடைந்த போது, “இருந்ததால் தானே திருடினார்கள்” என சத்யராஜ் நகைச்சுவையாக கூறினார்.

இயக்குநர் சொல்வதை அப்படியே செய்வார். என்னிடமெல்லாம் ‘நான் நன்றாக நடித்தேனா?’ என அவர் கேட்கும் போது எனக்கு கூச்சமாக இருக்கும்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு என்றவுடனே எனக்கு பயம் வந்துவிட்டது. ஏனென்றால், அவர் அண்ணன் சூர்யா போன்றே என்னிடமும் எதிர்பார்ப்பார். ‘அண்ணன் அழகெல்லாம் எனக்கு வராது’ என்றே அவரிடம் சொன்னேன். சினிமாவில் சம்பளம் அடுத்ததுதான். பேரார்வம் தான் முக்கியம்” என கார்த்தி தெரிவித்துள்ளார்.